×

கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து மாநகரில் 4 தியேட்டர்கள் திறப்பு

ஈரோடு :  ஈரோடு மாநகரில் முதற்கட்டமாக 4 தியேட்டர்கள் நேற்று திறக்கப்பட்டது. பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடித்து பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. தொற்று குறைய துவங்கியதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த 23ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஈரோடு மாநகரில் உள்ள 11 தியேட்டர்கள், புறநகரில் உள்ள 39 தியேட்டர்கள் என மொத்தம் 50 தியேட்டர்களும் கடந்த 23ம் தேதி திறக்கப்பட்டு, தூய்மை பணி செய்யப்பட்டது. ஆனால், புதிய படம் எதுவும் திரையிட விநியோகஸ்தர்கள் முடிவு செய்யாததால் தியேட்டர்கள் இயங்கவில்லை.

இந்நிலையில், ஈரோடு மாநகரில் உள்ள 11 தியேட்டர்களில் நேற்று முதற்கட்டமாக அபிராமி, அண்ணா, மகாராஜா, வி.எஸ்.பி., ஆகிய 4 தியேட்டர்கள் திறக்கப்பட்டன.இந்த 4 தியேட்டர்களிலும் காஞ்சூரிங் என்ற ஆங்கிலப்படம் தமிழில் டப் செய்து திரையிடப்பட்டது. முன்னதாக, தியேட்டருக்கு வந்த பார்வையாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு காய்ச்சல் இல்லை என்பவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர்.

அதேபோல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே தியேட்டருக்குள் அனுமதித்தனர். முதல் நாள் என்பதாலும், தியேட்டர் திறப்பு குறித்த தகவல் தெரியாததால் குறைந்த பார்வையாளர்களே தியேட்டருக்கு வந்தனர். இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்வேலு கூறியதாவது:தியேட்டர் ஊழியர்கள் அனைவரும்  தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதி செய்துள்ளோம். 2வது டோஸ் போடவும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். தற்போது, தமிழில் புதிய படம் திரையிட விநியோகஸ்தர்களுடன், மாநில தியேட்டர் சங்க நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும், அரசின் அனுமதியின்பேரில், நேற்று முதல் நாளாக மாநகரில் 4 தியேட்டர்களில் ஆங்கில படம் தமிழில் திரையிடப்பட்டது.

இதன்மூலம் புதிய படம் திரையிடும் போது, மக்களை எவ்வாறு அணுகுவது, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை எப்படி கடைபிடிப்பது என முன் உதாரணமாக அமையும். 4 தியேட்டர்களில் 2 தியேட்டர்களில் மட்டுமே பார்வையாளர்கள் வந்தனர்.  மீதமுள்ள 2 தியேட்டர்களில் பார்வையாளர்கள் வராததால் ஒரு காட்சி மட்டும் திரையிட்டு, மீதமுள்ள காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. ஓரிரு நாளில் புதிய தமிழ் படம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களில் திரையிடப்படும். பணியாளர்களையும், பார்வையாளர்களையும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Erode: The first phase of 4 theaters was opened in Erode yesterday. Visitors were allowed in following safety instructions.
× RELATED திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை